December 9, 2017 தண்டோரா குழு
ஜெர்மனி நாட்டில் ஆல்வின் என்ற கிராமம் இன்று(டிச 9) ஏலத்திற்கு வருகின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகம், கார், நகை, வீடு, வாகனங்கள் ஏலத்திற்கு வரும். ஆனால், இன்று ஜெர்மனி நாட்டில் ஆல்வின் என்னும் குக்கிராமம் ஏலத்திற்கு வந்துள்ளது.
கடந்த 1990ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி ஒன்றாக இணைந்த நேரத்தில், அந்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.அந்த கிராமத்தில் இருந்த நிலக்கரி ஆலை கடந்த 1991ம் ஆண்டு மூடப்பட்டது. இதையடுத்து, அந்த கிராமத்தில் இருந்தவர்கள் மேற்கு ஜெர்மனியில் குடிபெயர்ந்தனர்.அதன் பிறகு,யாரும் அந்த கிராமத்திற்கு திரும்பவில்லை.
இந்நிலையில் கடந்த 2002ம் ஆண்டு, ஒரு தனியார் முதலீட்டாளர்,மறு சீரமைப்பு செய்வதற்காக அந்த
கிராமத்தை வாங்கினார். ஆனால், அவரால் அதை செய்ய முடியவில்லை. இதையடுத்து, அந்த கிராமத்தை ஏலம் விட அவர் முடிவு செய்தார்.
இன்று நடக்கும் இந்த ஏலத்தில் அந்த கிராமத்தின் ஆரம்ப விலை 125,000 யூரோ ($ 147,230) டாலர்கள் ஆகும்.இதனையடுத்து யார் இந்த கிராமத்தை வாங்குவார்கள் என்று ஜெர்மன் நாட்டு மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.