December 12, 2017 தண்டோரா குழு
கோவை மேட்டுப்பாளையத்தில் பிறந்து ஒரு மாதமேயான குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அதனை தாயுடன் இணைப்பதற்காக காத்திருக்கின்றனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரகம், சுண்டப்பட்டி பிரிவு, வனபத்திரகாளியம்மன் கோவிலை அடுத்து தேக்கம்பட்டி சாலையோரம், பம்ப் ஹவுஸ் அருகில் ஒரு பெண் யானை இன்று காலை சாலையில் செல்பவர்களை விரட்டியுள்ளது. இதனால் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் வன ஆர்வலர்ளுடன் இணைந்து அந்த யானையை அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதிக்குள் விரட்டினர்.எனினும் அந்த யானை மீண்டும் மீண்டும் சாலைக்கே வந்துள்ளது.
இதனால், வனத்துறையினர் அப்பகுதி முழுவதும் தீவிர தணிக்கை செய்ததனர்.அப்போது, அந்த யானையின் ஒரு வயது மதிக்கத்தக்க யானைக்குட்டி பழைய வாய்க்காலுக்குள் விழுந்ததும்அதை கவனிக்காத யானை சாலையில் செல்பவர்களை துரத்துவதும் தெரியவந்தது.
இதனையடுத்து, உடனடியாக காயம் ஏதுமின்றி குட்டியை மீட்ட வனத்துறையினர் இளநீர் தண்ணீர், குளுக்கோஸ் கொடுத்து, நெல்லிமலை வனப்பகுதிக்குள் சுமார் 200 மீ. உட்சென்று விடுவித்து, தாய் யானை வருகையை எதிர்பார்த்து உள்ளனர்.இன்று இரவிற்குள் குட்டியானையை அதன் தாய் யானையுடன் சேர்த்துவிடுவோம் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.