December 13, 2017 தண்டோரா குழு
நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடு செய்த வழக்கில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் போது ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜஹாரா என்ற பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இதில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. அப்போது, அந்த நிறுவனத்திற்கு சாதகமாக செய்யல்பட்டதாக கூறி ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்கின் விசாரணை முழுவதும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ தாக்கல் செய்த வழக்கை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. மதுகோடா குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் தண்டனை விவரங்களை நாளை அறிவிக்கிறது.
கடந்த 2006 முதல் 2008 வரை 2 ஆண்டுகள் முதல்வராக இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ.வான மதுகோடா பிறக்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தினார். ஆட்சியை விட்டு இறங்கும்போது மதுகோடா மீது ஏராளமான புகார்கள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.