December 14, 2017 தண்டோரா குழு
முழுமையான விசாரணைக்குப் பிறகு கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் தண்டிக்கப்படுவார்கள் என சரிதா நாயர் கூறியுள்ளார்.
கோவை வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்து தருவதாக கூறி 26 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கேரள நடிகை சரிதா நாயர் மீது தொடரப்பட்ட வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கோவை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரிதாநாயர் இன்று ஆஜர் ஆனார். எனினும், சாட்சிகள் வராததால் வழக்கு வரும் ஜனவரி 8 ஆம் தேதிக்கு நீதிபதி
ராஜவேல் ஒத்தி வைத்தார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சரிதாநாயர்,
கேரளா சோலார் பேனல் வழக்கில் அரசியல் பிரமுகர்கள் உள்ளதால் விசாரணை தாமதமாக நடைபெற்று வருகிறது என்றும், முழுமையான விசாரணை முடிந்து கண்டிப்பாக கேரள முன்னாள் முதல்வர் உமன் சாண்டி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சரிதாநாயர் தெரிவித்தார்.