December 14, 2017 தண்டோரா குழு
நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகையால் மனிதனின் தேவைக்கு ஏற்ப காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் ஊருக்கு வருகின்றன. அப்படி ஊருக்குள் வரும் போது மனித விலங்கு மோதல் ஏற்படுகின்றது. அந்த வகையில் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறி வருகிறது.
இதனால், யானைகள் தங்களுடைய உணவு மற்றும் நீர்த் தேவைக்காக மனிதர்களின் இருப்பிடத்திற்கு வந்து விடுகின்றன. அப்படி ஊருக்குள் வரும் யானைகள் அனைத்தும் ரயிலில் அடிபட்டும், தேயிலை தோட்டங்களில் உள்ள குழிகளில் சிக்கியும், மின்சார வேலியில் மின்சாரம் பாய்ந்தும் உயிரை இழந்துள்ளன. அதன்படி கடந்த 100 நாட்களில் மட்டும் 40 யானைகள் பல்வேறு காரணங்களால் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் விளைநிலங்களை சேதப்படுத்துவது குடியிருப்பு பகுதிகளை தாக்குவது போன்ற காரணங்களுக்காக பொதுமக்கள் யாரும் யானைகள் இறப்பு குறித்து கவலை கொள்வதில்லை மறுபுறம் காண்டாமிருகங்கள் மற்றும் புலிகள் இறப்பிற்கு அக்கறை எடுத்துக் கொள்ளும் அரசு, யானைகள் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பது இல்லை. என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.