July 4, 2016
தண்டோரா குழு
வெளி நாட்டில் இருக்கும் போது பாரம்பரிய உடை அணியவேண்டாம் என்று தனது குடிமக்களுக்கு ஐக்கிய அரபு நாடுகள் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அரபுநாட்டு வியாபாரி ஒருவரைக் காவலர்கள் இஸ்லாமிக் ஸ்டெட்ஐச் சேர்ந்த தீவிரவாதி என்று தவறுதலாக எண்ணி கைது செய்து கடுமையாக நடந்து கொண்டதே UAE யின் எச்சரிக்கைக்குக் காரணம்.
41 வயதான அஹ்மெட் அல் மெநலி மூளை சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்றுள்ளார். ஒஹியோவில் உள்ள க்லெவெலண்ட் உணவகத்தில் தங்கியுள்ளார். வெள்ளை அங்கியும், அரபுத் தலைப்பாகையும் அணிந்திருந்தார்.
போனில் பேசிய விதத்தையும், ஆடைகளையும் கண்டு ஹோட்டல் ஊழியர் ஒருவர், இவரைத் தீவிரவாதி எனக் கருதி காவலரை வரவழைத்துள்ளார். காவலர்களும் தவறாக எண்ணியதால் கடுமையாக நடந்துள்ளனர். உண்மை அறிந்த பின் அவரை விடுவித்து விட்டனர்.
இந்த சம்பவத்தைப் பற்றி அஹெமெட் கூறுகையில், தன்னைக் காவலர்கள் மிகவும் துன்புறுத்தியதாகவும், பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தவறு என்று தெரிந்த பின்பும் கூட போலீஸ் மற்றும் ஹோட்டலின் ஊழியர்கள் எவரும் மன்னிப்பு கோரவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையில் அவரது உடல் நிலை மோசமானதலால் மயக்கமுற்ற அவரை மீண்டும் மருத்துவமனைக்கே சிகிச்சைக்காக போலீஸார் சேர்த்தனர். இந்தச் சம்பவத்தை மனதில் வைத்தே அரபு அயல் நாட்டு அமைச்சகம் மேற்கண்ட செய்தியை வெளியிட்டது. இன்றைய நிலையில் பாரம்பரிய உடை அவர்களது பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கலாம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
தீவிரவாதத்தில் முஸ்லீம்கள் ஈடுபடுவதைச் சுட்டிக்காட்டி, இஸ்லாமியர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு தற்காலிகத் தடை விதிக்கவேண்டும் என்று அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரும்ப் தெரிவித்தது பலரின் விமரிசனத்திற்கு உள்ளானது நினைவிருக்கலாம்.