December 18, 2017 தண்டோரா குழு
கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் மறுதேர்வுக்கு 5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மறுதேர்வுக்கு கூடுதலாக 5 மடங்கு கட்டணம் வசூலிப்பதால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் தமிழகம் முழுவதும் 35 கல்லூரிகள் உள்ளன.இந்த பல்கலைக்கழகத்தில் வேளாண்மை,தோட்டக்கலை,வனவியல் என 13 வேளாண் படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கல்லூரிகளில் சுமார் 11,200 பேர் பேர் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் பல்கலை, கல்லூரி மாணவர்களுக்கு தோல்வியுற்ற பாடத்தில் தேர்ச்சிபெற, மறுதேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு வரை, தேர்வர்கள் மறுதேர்வு எழுத ரூ.200 மட்டும் கட்டணமாக பெறப்பட்டு வந்தது.
இந்நிலையில் கோவை வேளாண் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து கடந்த 20ம் தேதி பல்கலைக்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கு மறுதேர்வு தொடர்பான ஒரு சுற்றறிக்கை அனுப்பட்டது.
அந்த சுற்றிகையில்,
ஒன்று முதல் அதற்கு மேற்பட்ட இளங்கலை பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்கள் மறுத்தேர்வு எழுத டிசம்பர் 4ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.அதன்பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும்,60 மதிப்பெண், 100 மதிப்பெண் அடிப்படையில் (1+1, 2+1, 1+2, 2+2) எழுத்து மற்றும் செய்முறை தேர்வு நடத்தப்படும். 133வது அகாடமிக் கவுன்சில் முடிவின்படி மறுதேர்வு கட்டணமாக முதல்முறை எழுதுபவர்களுக்கு ரூ.ஆயிரம் ரூபாயும், 2வது முறை தேர்வு எழுதுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் ரூபாயும், 3வது முறை தேர்வு எழுதுபவர், அதற்கு அடுத்து தேர்வு எழுதும் தேர்வர்கள் ரூ.3 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும், என அந்த சுற்றிகையில் கூறப்பட்டுள்ளது.அரசு நடத்தும் வேளாண் பல்கலையில் கூடுதலாக 5 மடங்கு மறுதேர்வு கட்டணம் வசூலிப்பதால் உயர்கல்வித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வேளாண் பல்கலை மாணவர்கள் கூறியதாவது:
“கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் தான் அதிகளவில் படித்து வருகின்றனர். கடந்தாண்டு வரை மறுத்தேர்வு எழுத ரூ.200 மட்டுமே பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு வாரியம் கட்டமணாக பெறப்பட்டு வந்தது.
இந்நிலையில் திடீரென்று அகாடமிக் கவுன்சில் முடிவு எனக்கூறி மறுதேர்வு கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு பல்கலை நிர்வாகம் உயர்த்தியது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு முறைக்கு ரூ.ஆயிரம், 2வது முமுைறக்கு ரூ.2 ஆயிரம், 3வது முறை எழுதினால் ரூ.3 ஆயிரம் வசூலிப்பது கட்டணக்கொள்ளை என்று தான் கூறமுடியும்.
நாங்கள் தனியார் அல்லது அரசு பல்கலையில் படிக்கிறோமோ என்பதே சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கட்டணம் உயர்வு குறித்து 2 நாட்கள் பின்னரே தெரியவந்தது. 4ம் தேதி கடைசிநாள் என்பதால், நாங்கள் எப்படி ஆயிரம், 2 ஆயிரம், 3 ஆயிரம் என தேர்வு கட்டணம் செலுத்த முடியும் என்பது தெரியவில்லை.
மேலும்,இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு துறையிடம் கேட்டால், மழுப்பலாக பதில் அளிக்கின்றனர். எதன் அடிப்படையில், இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என்பதே தெரியவில்லை. உடனே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பழைய கட்டணத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக பல்கலை மாணவர்கள் அண்ணா நிர்வாக அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் நான்கு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மாணவர் சேர்கை, தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர், பதிவாளர் தலைமையில் மாணவர்களுடன் பேச்சு வார்தை நடைபெற்றது.பல்கலைக்கழகம் நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பழைய கட்டணம் கட்டினால் போதும் என அறிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.