December 20, 2017 தண்டோரா குழு
பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக் கூடிய நாப்கினை குறைந்த விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் உலக அளவில் புகழ் பெற்ற கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். நாப்கின்கள் வாங்க முடியாமல் பழைய முறைப்படி சுகாதாரம் இல்லாதவற்றை பயன்படுத்திய பெண்களுக்கு அருணாச்சலத்தின் கண்டுபிடிப்பு ஒரு வரப் பிரசாதம்.
உலக அளவில் புகழ்பெற்ற இவரின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேட்மேன்.ஆர்.பால்கி இயக்கத்தில் நடிகையும் அக்ஷய் குமாரின் மனைவியுமான டுவிங்கிள் கண்ணா தயாரித்துள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் கோவை போஸ்ட் இணையதள பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அருணாச்சலம் முருகானந்தம்,
ஆரம்பத்தில் என் வாழ்கையை மையமாக வைத்து படமெடுக்க இயக்குநர் வெற்றிமாறன் என்னை அணுகினார். அப்போது அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை. எனினும் நான் ஹாலிவுட்டில் என் வாழ்க்கை தொடர்பான படம் உருவானால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் தமிழில் என் கதை உருவாவதை அந்த சமயத்தில் தள்ளி வைத்தேன்.
ஆனால்,டுவிங்கிள் கண்ணா சுமார் இரண்டரை வருடங்கள் தொடர்ந்து என்னை தொடர்பு கொண்டு படம் எடுப்பது குறித்து பேசினார். ஒருமுறை லண்டனில் அவரை நேரில் சந்தித்தேன் அப்போது அவரது ஆர்வத்தை அணுகுமுறையையும் கண்டு நான் ஒப்புக்கொண்டேன்.விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
மேலும், என் வாழ்க்கையை மையாமாக வைத்து ஹாலிவுட்டிலும் படம் எடுக்க முடிவுவாகியுள்ளது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.