July 5, 2016
தண்டோரா குழு
பூமியை விட சுமார் 15 மடங்கு பெரிய பல ஆயிரம் டன் வைரங்களுடன் கூடிய புதிய கிரகம் இருப்பது சமீபத்திய கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒஹியோ மாநில பல்கலைக்கழக புவியியல் துறை விஞ்ஞானிகள் இந்தக் கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். கார்பன் எனப்படும் கரிய தாதுக்கள் பூமிக்கடியில் அதிக அழுத்தத்தில் இருக்கும் போது ஒளிரும் தன்மை பெறுகின்றன.
அவைதான் வைரமாக வெட்டி எடுக்கப்பட்டு விலை மதிப்புமிக்க பொருளாக கருதப்படுகின்றன. இத்தகைய கார்பன் படிமங்களை அதிகம் கொண்ட கிரகங்கள் சூரிய மண்டலத்தைச் சுற்றிலும் ஏராளமாக இருப்பதாகப் பல்கலைக்கழக புவியியல் துறை ஆராய்ச்சி குழு தலைவர் வெண்டி பனேரோ தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், பூமியைவிட 15 மடங்கு பெரிய கிரகங்கள் சூரிய மண்டலத்தில் காணப்படுகின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட பரப்பு வைர படிமங்களை கொண்டிருக்கலாம்.
காற்று இல்லாததால் உயிரினங்கள் வசிக்க வாய்ப்பில்லாத இந்தக் கிரகங்கள் பல ஆயிரம் கோடி டன்களாக இருக்கும். அதிக வெப்பம் கொண்ட இந்தக் கிரகங்களின் கார்பன் படிமங்களில் பெரும்பாலானவை வைரமாக இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார் மேலும், சுமார் 600 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை நாசாவின் கெப்ளர் விண்கலம் உறுதிசெய்துள்ளது.
அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் வேறு கிரகங்கள் இருக்கிறதா என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாசா) கெப்ளர் விண்கலம் ஆராய்ச்சி செய்து வருகிறது.
வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றும் கிரகம் ஒன்று ஏறக்குறையப் பூமி போலவே இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. அதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறு இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.
இதைப் பற்றி அவர்கள் பேசும்போது, சுமார் 600 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை கெப்ளரில் இருக்கும் நவீன கமெராக்கள் உறுதி செய்துள்ளன என்றும் சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்றை அந்தக் கிரகம் பாதுகாப்பான தொலைவில் சுற்றி வருகிறது. அதன் வெப்பநிலை உள்ளிட்ட அம்சங்களைப் பார்க்கும் போது உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவே தெரிகிறது.
கெப்ளர் 22பி என்று அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. அது பூமியை விட சுமார் 2.4 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று தெரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.