December 22, 2017 தண்டோரா குழு
ஜெயலலிதாவை தாய் என்று உரிமைகோரும் அம்ருதா, தந்தை யார் என்பது பற்றி ஏன் அக்கறை கொள்ளவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அம்ருதா தரப்பில், ஜெயலலிதாவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர் தன்னுடைய தாய் என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை நடத்துமாறும் தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.எனினும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே டிஎன்ஏ பரிசோதனை நடத்துமாறும், அதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அம்ருதா தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து அரசு தரப்பில்அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதிடும் போது, இந்த வழக்கு விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்டுள்ளது. விசாரணைக்கே உகந்தது அல்ல. இதுபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கியுள்ளது என்றும், தங்களது தரப்பு வாதத்தை விரிவாக எடுத்துவைக்க காலஅவகாசம் வேண்டும் என்றும் கூறினார். மேலும், அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஜெயலலிதாவை சந்தித்திருப்பதாக கூறுவதற்குக்கூட எவ்வித ஆதாரத்தையும் வழங்கவில்லை அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கிடையில், ஜெயலலிதாவை தாய் என்று உரிமைகோரும் அம்ருதா, தந்தை இன்னார் தான் என்று கூறுவதை தடுப்பது எது என்று நீதிபதி வைத்தியநாதன் கேள்வி எழுப்பினார்.மேலும், அம்ருதாவுக்கு டிஎன்ஏ பரிசோதனை ஏன் நடத்தக்கூடாது எனவும் இதற்கு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில் ரத்த மாதிரிகள் போன்ற விவரங்கள் இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.
அப்போது அரசு தரப்பில் அதுபற்றி தங்களுக்கு தெரியாது. அடிப்படை முகாந்திரமே இல்லாத நிலையில், டிஎன்ஏ பரிசோதனை வரை செல்வது இறந்தவரின் தனிமனித உரிமையை மீறும் செயல் என வாதிட்டப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதற்குள் சென்னை மாநகராட்சி, மாநகர காவல் ஆணையர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.