December 22, 2017 தண்டோரா குழு
2ஜி வழக்கில் குற்றமிழைத்தோரை தண்டிக்க சட்டரீதியான மேல்நடவடிக்கைகளை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான உரிமம் வழங்கப்பட்டதில் மத்திய அரசுக்கு ரூ. 1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த ஒதுக்கீடுகளை தவறான முறையில் பெற்றதற்காக சில தொலைதொடர்பு நிறுவனங்களை உச்சநீதிமன்றம் கண்டித்தது. 122 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்தே அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக சிபிஐ இரண்டு வழக்குகளையும், அமலாக்கத்துறை ஒரு வழக்கினையும் நடத்தியது.
கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்குகளில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றச்சாட்டுக்கள் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதாகவும் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே, அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டினால் நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பீட்டுக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி குற்றத்தினை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சிபிஐக்கும், அமலாக்கத்துறைக்கும் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இதன் மூலமே குற்றமிழைத்தோர் தண்டிக்கப்படுவார்கள்.
இதனை முன்னெடுக்க சட்டரீதியாக அனைத்து மேல்நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சிபிஐயையும், அமலாக்கத்துறையையும் வலியுறுத்துகிறது.இவ்வாறு கூறியுள்ளார்.