July 6, 2016 தண்டோரா குழு
சமீபத்தில் ஒரு வாயில்லா ஜீவனை மாடியில் இருந்து தூக்கி வீசினான் ஒரு கல்நெஞ்சு கொண்ட ஒரு மிருகம். அந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவியது. மொட்டை மாடியிலிருந்து தூக்கிவீசப்பட்ட நாய், அதிர்ஷ்டவசமாகக் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளது. அந்த நாய்க்கு ‘பத்ரா’ என்று பெயரிடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாடியில் நின்றபடி இளைஞர் ஒருவர் நாய் ஒன்றைத் தூக்கி கீழே வீசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. மேலும், 4 வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்த நாய், கீழே விழுந்து துடிக்கும் காட்சிகள் பார்ப்பவர்கள் மனதை பதைபதைக்கச் செய்தது.
இந்த வீடியோவிற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து காவல் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் நாயைத் தூக்கிப் போட்டு, அதனை வீடியோவாகப் பதிவு செய்தவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மாணவர் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் வெளிவிடப்பட்டார்.
இதற்கிடையே, காவல்துறையுடன் விலங்குகள் நல ஆர்வலர் ஷ்ரவன் கிருஷ்ணன் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது அங்குப் பலத்த காயங்களுடன் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாய் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்ததைப் பார்த்துள்ளார்.
உடனடியாக அந்த நாய்க்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நாயை ஷ்ரவன் கிருஷ்ணன் தற்போது அவருடைய பராமரிப்பில் வைத்து உள்ளார். மேலும், அந்த நாய்க்கு பத்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த நாய் மெல்ல மெல்ல உடல் நலம் தேறி வருவதாகத் தெரிகிறது.
நாய் காப்பாற்றப்பட்டது தொடர்பாக ஷ்ரவன் இளைய தளமான பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதை, சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அத்தகவலை ஷேர் செய்துள்ளனர். கமெண்ட் செய்துள்ளவர்கள் தங்களின் மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர் என்று மகிழ்ச்சியுடன் ஷ்ரவன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.