December 26, 2017 தண்டோரா குழு
அரசியல் எனக்கு புதிது அல்ல என தனது ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசினார்.நடிகர் ரஜினிகாந்த் இன்று ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டார். கடந்த முறை ரசிகர்களை சந்தித்த போது போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரஜினி கூறியிருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இன்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசுகையில்,
ரசிகர்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி.ரசிகர்களை பார்த்தவுடன் புத்துணர்வு
ஏற்பட்டுள்ளது. கதாநாயகன் ஆகவேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்கு வரவில்லை. முள்ளும் மலரும் திரைப்படத்தை பார்த்துவிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து எனக்கு அனுப்பி வாழ்த்து தெரிவித்திருந்தார். எனது பிறந்த நாளின்போது நான் தனியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
எனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களை விட ஊடகங்கள் அதிக ஆர்வத்தில் உள்ளனர். போர் என்றால் அரசியல் என்று தான் அர்த்தம். போரில் ஜெயிப்பதற்கு வீரம் மட்டும் போதாது, வியூகம் வேண்டும்.அரசியல் எனக்கு புதிது அல்ல; அரசியல் பற்றி தெரிந்ததால் தான் வர தயங்கிறேன்.
அரசியலுக்கு வருவது தொடர்பான முடிவை டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.