December 27, 2017 தண்டோரா குழு
கொல்கத்தாவில் வறுமை கோட்டின்கீழ் உள்ள குழந்தைகளுக்காக 2 சிறுமிகள் சேர்ந்து நூலகம் தொடங்கியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
வங்க தேசத்தின் தலைநகரான கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் 12 வயது மனாஸ்வி துகார் மற்றும் 9 வயது சுஹாசினி துகார். இருவரும் சகோதரிகள். இவர்கள் வறுமை கோட்டின்கீழ் உள்ள குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். உடனே, தங்கள் ஆர்வத்தை அவர்களுடைய தாய் ஷீதலிடம் தெரிவித்தனர். அவரும் அவர்களுக்கு ஆதரவு அளித்தார். இதையடுத்து அந்த இரண்டு சகோதரிகள் ‘Readers Planet’ நூலகத்தை இன்று(டிசம்பர் 27) தொடங்கியுள்ளனர்.
தென் மத்திய கொல்கத்தாவின் Ballygungeஎன்னும் இடத்தில், சுமார் 300 சதுர அடி கொண்ட இடத்தில் ‘Readers Planet’ நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அறிவியல், வரலாறு, பொது அறிவு, நிலவியல், ஆங்கிலம், ஹிந்தி கதை புத்தகங்கள், Value Education உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் உள்ளது. திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை, காலை 11 மணிமுதல் மாலை 7 மணி வரை இந்த நூலங்கம் திறந்திருக்கும். இங்கு இருக்கும் படிப்பறையை இலவசமாக பயன்படுத்த முடியும்.
“மனாஸ்வி மற்றும் சுஹாசினி இருவரும் வறுமை கோட்டின் கீழ் உள்ள குழந்தைகளுக்கு புத்தகங்களை இலவசமாக வழங்கவேண்டும் என்று விரும்பினர். ஆனால், அப்படி செய்தால் சில குழந்தைகளுக்கு மட்டுமே புத்தங்கள் வழங்க முடியும். அதனால் தான், வறுமை கோட்டின்கீழ் உள்ள குழந்தைகள் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க, ‘Readers Planet’ நூலகத்தை தொடங்கினார்கள்” என்று ஷீதல் தெரிவித்தார்.