December 28, 2017 தண்டோரா குழு
ஜனவரி 8-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று தமிழக சட்டப்பேரவை செயலாளர் பூபதி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடைசியாக கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதிவரை நடந்தது. அதன்பின், பேரவைக் கூட்டத்தை முடித்து வைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். அதன் பின் தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றார்.
பொதுவாக ஒரு சட்டப்பேரவை கூட்டம் முடிந்தால், அது முடிந்த தேதியில் இருந்து அடுத்த 6 மாதத்துக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி ஜன. 18-ம் தேதிக்குள் அடுத்த கூட்டத்தை நடத்த வேண்டும்.
இந்நிலையில் ஜனவரி 8-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க உள்ளதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் பூபதி அறிவித்துள்ளார்.ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அதிகப்பட்சமாக 3 அல்லது 4 நாட்கள் நடைபெறலாம். ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து இறுதிநாள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவார்.
அதைத்தொடர்ந்து, பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து மார்ச் மாதம் 2018-19ம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை கிளப்ப முடிவு செய்துள்ளன.அதேநேரத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனும் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் செல்கிறார். இதனால், அவரது வருகையும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.