December 28, 2017 தண்டோரா குழு
கோவையில் சுரங்க பாதை அமைக்காததைக் கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு ரயில்வே மேம்பாலத்தில் சுரங்க பாதை அமைக்காத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பீளமேடு பகுதியில் கடந்த 2011 ம் ஆண்டு துவங்கப்பட்ட ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து, கடந்த டிசம்பர் 3 ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க சுரங்க பாதை அமைக்கப்படுமென சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்திருந்தது.ஆனால் இதற்கான பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை.
இந்நிலையில்,இதனை கண்டித்து முருகன் நகர், ஹட்கோ காலணி உள்ளிட்ட பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும், சுரங்க பாதை அமைக்காததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், சுரங்கபாதை பணிகளை உடனடியாக துவக்கவில்லை எனில் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.