December 30, 2017 தண்டோரா குழு
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 5வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.இதில் மத்திய சென்னை, வட சென்னை மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டிருக்கிறார்.
பின்னர் ரசிகர்களின் மத்தியில் பேசிய ரஜினிகாந்த்,
1973ல் முதல் முதலாக சென்னை வந்தேன். சென்னை எனக்கு எப்போதும் மெட்ராஸ் தான்.1960களில் கர்நாடகாவில் மெட்ராஸ் குறித்து பெருமையாகவும் மெட்ராஸ் போன்று சிறந்து விளங்கவேண்டும் என்றும் பேசிக்கொள்வார்கள்.
தமிழ் மட்டும் கற்றுக்கொண்டால் உன்னை நான் உயரத்துக்கு கொண்டு செல்கிறேன் என இயக்குநர் பாலசந்தர் உறுதி அளித்தார்.பிறகு,எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர், வாசு போன்ற இயக்குநர்கள்
என்னை மெருகேற்றினார்கள்.
சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் ஆகியோர் என்னை சூப்பர் ஸ்டாராக ஆக்கினார்கள். ஷங்கர் போன்ற இயக்குநர்கள் இந்திய அளவிலான உயரத்துக்கு அழைத்துச் சென்றனர்.
நான் நோய்வாய்ப்பட்டபோது என்னை மீட்டுக் கொண்டு வந்தவர்கள் ரசிகர்களாகிய நீங்கள் தான். உங்களின் அன்புக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
மேலும்,காலா திரைப்படத்திற்கு பிறகு நான் என்ன செய்யப்போகிறேன் என்பது ஆண்டவன் கையில் தான் உள்ளது.பல ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு சாத்தியமாகிறதா என்று நாளை தெரியும்.