December 30, 2017 தண்டோரா குழு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவில்லமாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோர் வேதா இல்லத்துக்கு வந்தனர்.அவர்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சசிகலா வசித்த இரு அறைகளுக்கு ஏற்கெனவே சீல் வைத்துள்ளதால் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆய்வு மற்றும் அளவிடும் பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வருகையை ஒட்டி, வேதா இல்லம் முன்பு 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பணிகள் முழுவதும் நிறைவடைந்த பின்னர், வேதா இல்லம் அரசுடைமையாக்கப்படும் என்று கூறப்படுகிறது.இதுமட்டுமின்றி இன்று மாலைக்குள் வேதா இல்லம் அரசுடைமையாக்கபட்ட இடம் என்று அறிவிக்கப்பட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.