January 3, 2018 தண்டோரா குழு
கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி சாலை மறியலில் ஈடுபட்ட வாடகை கார் ஓட்டுனர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாடகை கார் ஓட்டுனர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாகன ஓட்டுனர்கள் 8 மணி நேரம் மட்டுமே வாகனம் ஓட்ட வேண்டும் மற்றும் 1961 ஆம் ஆண்டு போக்குவரத்து தொழிலாளர் நலச்சட்டம் ஆகியவற்றை கண்டித்தும்,ஜி.எஸ்.டி காரணமாக உயர்ந்துள்ள வாகன காப்பீட்டு தொகையை குறைக்க வலியுறித்தியும், கால் டாக்சி மற்றும் மேக்ஸி கேப் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாள வேலைனிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தால் கோவையில் பல ஆயிரக்கணக்கான கால் டாக்சிக்கள் மற்றும் மேக்சி கேப்கள் இயங்கவில்லை.மேலும்,தங்களது கோரிக்கைகள் தொடர்பாக கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்த ஓட்டுனர்கள் வட்டார போக்குவரத்து அலுவலர் தங்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிய வேண்டும் என்று வலியுறித்தினர்.ஆனால் இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து ஓட்டுனர்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில்,தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுமாறு வலியுறித்தினர். இதையடுத்து மறியலை கைவிட்ட ஓட்டுனர்கள் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 137 பேரை போலீசார் கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.