January 3, 2018 தண்டோரா குழு
முத்தலாக் தடுப்பு மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இஸ்லாமியர்களின் வழக்கப்படி உடனடி முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறையைச் தண்டனைக்குரிய குற்றமாகக் கருத வகை செய்யும் மசோதா, கடந்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் இன்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.
இதையடுத்து,இந்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தையும் கொண்டு வந்தனர். இதனால், ஆளும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மாநிலங்களவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது.இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த தீர்மானத்திற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உடனடியாக நோட்டீஸ் அளித்து ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதை ஏற்க முடியாது என விமர்சித்தார். மேலும்,உடனடி முத்தலாக்கைத் தடுப்பதற்கான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், தாமதமின்றி இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகவும் ஜேட்லி விளக்கினார்.
இதற்கு,உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு மாறான கருத்தை ஜேட்லி கூறுவதாக காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் குற்றம்சாட்டினார். முத்தலாக் தடுப்பு மசோதா தொடர்பாக கடும் விவாதம் எழுந்ததால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.