July 9, 2016 தண்டோரா குழு
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி. .தான் பாசத்தோடு வளர்த்த தாய் நாயையும் ,அதன் குட்டியையும் தனது கணவர் வேறு இடத்திற்கு அனுப்பி விட்டதால் துக்கம் தாளாமல் நெருப்பு வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். எண்பத்தைந்து விழுக்காடுகள் வெந்த புண்களோடு உயிருக்காக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார்.
நாய் குட்டிகளைப் பராமரிப்பது மிகவும் தொந்தரவான விஷயம் என்ற காரணத்தினால் சாந்தியின் கணவர் அவைகளை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார் என்று பரமதிவெல்லுர் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழகிய பாசத்தின் காரணமாக, மன அழுத்தத்தால் உணர்ச்சிவசப்பட்டு அவரது மனைவி இம் முடிவை எடுத்துள்ளார் . இதுவரை வழக்கு எதுவும் எழுத்து பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை.விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் காவல் துறை கூறியுள்ளது.
சாந்தி இரு குழந்தைகளுக்குத் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு முன்பு இரு மருத்துவ மாணவர்கள் மாடியிலிருந்து நாய் ஒன்றைத் தூக்கி எறிந்த சம்பவம் விலங்கு மற்றும் சமூக ஆர்வலரிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம். நாயின் உயிருக்கு சேதமின்றி ,காயங்களுடன் தப்பியது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று அனைவரும் தங்கள் முகநூலில் பதித்துள்ளனர்.
ஒரு சில மனிதர்கள் அப்படியிருக்க, சாந்தி போன்றோர் தனது சொந்தக் குழந்தைகளைப் பற்றி கூட கவலைப் படாது,வளர்ப்புப் பிராணிக்கு வேண்டி தன் உயிரையே மாய்த்துக் கொள்ள த் துணிந்திருப்பது மனிதர்களின் மனநிலையின் பல்வேறு பரிணாமங்களைக் காட்டுகிறது.
ஒரு சிலர் கொலைகள் செய்வதே தர்மம் என்ற கோட்பாடுடையவர்களாக இருக்கையில் வேறு சிலர் எறும்புக்குக் கூட தீங்கிழைக்க விரும்பாதவர்களாக உள்ளனர்.மனித மனம் ஒரு புதிரே.