July 9, 2016 தண்டோரா குழு
தற்போது சினிமாதுறையில் ஒரு படத்தின் வெற்றி என்பது இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கப்படுகிறது. முதலாவதாக வசூலில் சாதனை படைக்கும் வெற்றி. அதுவும் முதல் ஒருவாரத்தில் வசூலாகும் தொகையைப் பொறுத்தே அந்தப் படத்தின் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படுகிறது.
இரண்டாவது வெற்றி வசூலைத் தாண்டி அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும் வெற்றி. இந்த வகைப்படங்கள் வசூலில் குறைவாக இருந்தாலும் ஏ.பி.சி என அனைத்து சென்டர்களிலும் மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெரும்.
மேலும் வசூலிலும் தயாரிப்பாளருக்கு லாபத்தை ஈட்டித்தரும். இந்த வகை படங்கள் நீண்ட நாட்களுக்குத் திரையிடப்படும். இதில் முதல் வகை வெற்றி மட்டுமே எப்போதும் கொண்டாடப்படுவது வழக்கம். இரண்டாம் வகை படங்கள் பாடல், சின்னதிரை உரிமம் உள்ளிட்ட பல இதர வருவாயை மட்டுமே ஈட்டித்தரும் என்பதால் ரைட்ஸ் எனப்படும் உரிமங்களில் பணம் சம்பாதிக்க முடியும்.
இந்நிலையில் தமிழில் சினிமாவில் மட்டும் மாதம் 20 படங்கள் வெளியாகின்றன. இதில் முதல்வகை வெற்றியைப் பெரும் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதில் சில படங்கள் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியடைகிறது. இந்தாண்டு வெளியாகி அவ்வாறு வெற்றியடைந்த படங்களில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த முதல் ஐந்து இடங்களைப் பிடித்த 5 படங்களின் வரிசை வெளியிடப்பட்டுள்ளது. அவை
முழுக்க முழுக்க முதல்நாள் வசூல் அடிப்படையில் மட்டுமே கணிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் அதிக ஸ்டார் வேல்யூ உள்ள விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படம் உள்ளது. இந்தப் படம் சில பிரச்சனைகளால் செங்கல்பட்டு பகுதியில் ரிலீஸ் ஆகாத போதும், முதல் நாளில் 13.5 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.
இதையடுத்து, 2 வது இடத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமான ‘24’, 6 கோடி ரூபாய் வசூல் செய்து இரண்டாம் இடமும், 3வது இடத்தில் காமெடியை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படமான ரஜினி முருகன் 5 கோடி ரூபாய் வசூலுடன் உள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தில்லுக்கு துட்டு படம் முதல் நாளில் 4.5 கோடி வசூல் செய்து 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
சுந்தர்.சிஇயக்கத்தில் உருவான அரண்மனை 2, படம் 4 கோடி ரூபாய் வசூலுடன் அந்தாவது இடத்தில் உள்ளது. இந்த வரிசையில் முதல் இரண்டு படங்களும் ஸ்டார் வேல்யூவிற்காக வசூல் சாதனை படைத்துள்ள போதும், மூன்றாம் இடம் காமெடிக்கும், நான்கு மற்றும் ஐந்தாம் இடம் பேய் படங்களுக்கும் கிடைத்துள்ளது. இதிலிருந்து இன்னமும் தமிழக சினிமா ரசிகர்களைப் பிடித்த பேய் இன்னமும் விடவில்லை என்பது தெரிகிறது. இந்த வரிசைக்குப் பிறகு மேலும் பல பேய் படங்கள் வெளிவந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.