January 5, 2018 தண்டோரா குழு
அரசு பேருந்து போக்குவரத்து ஊழியர்களின் பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, கோவையில் 90 சதவீதமான அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுடன் போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து நேற்று முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்ததை துவங்கினர்.
கோவை, ஈரோடு, உதகை, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து சுமார் 6ஆயிரம் பேருந்துகளும், அதில் கோவை நகரத்திற்கு 1200 மற்றும் புறநகர பகுதிகளுக்கு 300 என கோவை மாவட்டத்தில் சுமார் 1500 பேருந்துகளும், 12 ஆயிரம் ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் சுங்கம், உக்கடம், ஒண்டிப்புதூர், கவுண்டம்பாளையம், அன்னூர், சூலூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் என 18 பணிமனைகளிலும் பேருந்துகள் நேற்று இரவு முதலே திருப்பி வரப்பட்டு நிறுத்தப்பட்டது.
மேலும்,காலை முதல் தீவிரமாக நடைபெறும் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து கோவையில் 90 சதவீதமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று தெரிவித்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள், ஆங்காங்கே போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.