January 6, 2018 தண்டோரா குழு
கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்-க்கு 3.5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பீகார் மாநில முதல்வராக 1990 முதல் 97 வரை லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது மாட்டுத்தீவனம் வழங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சுமார் ரூ.950 கோடியை லாலு லபக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக லாலு பிரசாத் மீது 5 வழக்குகள் உட்பட 64 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.
இதனையடுத்து, இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டு லாலு பிரசாத் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அவர் மீது தொடரப்பட்ட 5 வழக்குகளில் ஒன்றில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அளித்தது. அதன் பின்னர் லாலு ஜாமீனில் வெளிவந்தார். பின்னர், சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லாலுபிரசாத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் மீண்டும் இவ்வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி நீதிபதி சிவபால் சிங் தீர்ப்பளித்தார். பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா உட்பட 7 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கான தண்டனை விபரங்கள் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.
இதையடுத்து, குற்றவாளியான லாலு பிரசாத் யாதவ் பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக தண்டனை அறிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கால்நடை தீவன ஊழல் வழக்கில் இன்று தண்டனை விவரங்களை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்தார். அதில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவிற்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்ட பூல் சந்த், மகேஷ் பிரசாத், பேக் ஜூலியஸ், சுனில்குமார், சுசில்குமார், சுதிர்குமார் மற்றும் ராஜா ராமுக்கு 3.5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் பாதியே தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, லாலுவின் வழக்கறிஞர் நேற்று லாலுவுக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.