January 8, 2018
tamil.samayam
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் குக், இரட்டை உலக சாதனைகளை படைத்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, 135 ஆண்டு பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி வென்றது. நான்காவது டெஸ்ட் போட்டி ‘டிரா’ ஆனது.
இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்கிறது. இதில் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து 346 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 649 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்தது.
குக் சாதனை:
இதில் இரண்டாவது இன்னிங்சில் குக் 5 ரன்கள் எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் 12,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் குறைந்த வயதில் இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். இவர் 33 வயது 13 நாட்களில் இந்த சாதனையை படைத்தார். முன்னதாக ஜாம்பவான் சச்சின் 35 வயது 176 நாட்களில் இம் மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது. இது தவிர அறிமுகமாகி குறைந்த ஆண்டில் இம்மைல்கல்லை எட்டிய வீரர் என்ற இரண்டாவது உலக சாதனையும் படைத்தார் குக்.
இவர் 11 ஆண்டுகள் 312 நாட்களில் இம்மைல்கல்லை எட்டினார். முன்னதாக இலங்கையின் சங்ககரா 14 ஆண்டுகள் 167 நாட்களில் இம்மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது.
ஆமை வேகம்…
அதே நேரத்தில் குறைந்த இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டிய வீரர்கள் பட்டியலில் குக் (275 இன்னிங்ஸ்) ஆறாவது இடம் பிடித்தார். இப்பட்டியலில் இலங்கை வீரர் குமார் சங்ககரா (224 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார்.