January 8, 2018 தண்டோரா குழு
தமிழகம் மருத்துவ துறையில் சிறப்பாக செயல்படுகிறது என ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது என திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி கூறியுள்ளார்.
கோவை லட்சுமி மில் பகுதியில் திராவிடர் கழகத்தின் கோவை மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுள்ள அவ்வமைப்பின் தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
“மத தீவிரவாதம், சாதி வெறி வளர்ந்து வரும் சூழலில் நாத்திகம் தான் மனிதநேயத்தை உருவாக்கும். தமிழ்நாட்டில் மட்டும் நாத்திகர் இயக்கம் பெரியாரினால் மக்கள் இயக்கமாக உள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சராக்கும் சட்டத்தை நிறைவேற்ற கோரியும், மத்திய அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றக்கோரியும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என தெரிவித்தார்.
ஆன்மிக அரசியல் என்பது சொல்பவர்களுக்கும் புரியாது, கேட்பவருக்கும் புரியாது எனவும், ஆன்மிகம் என்பது சாமியார் வேலை. ஆட்சி நடத்துவது அரசியல்வாதிகள் வேலை. இரண்டிற்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தார்.
நடிகர் அரசியல் வருகை குறித்த கருத்து தெரிவித்த அவர், அரசியல்வாதிகள் நல்ல நடிகர்களாக இருந்திருக்கிறார்கள். நடிகர் நல்ல அரசியல்வாதிகளாக இருப்பார்களா என கேள்வி எழுப்பினார்.
போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது. தொழிற்சங்கங்களை அழைத்து பேசி விரைவில் தீர்வு காண வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து துறையினை தனியார் மயமாக்கலாம் என்ற நீதிமன்ற கருத்து குறித்த கேள்விக்கு, அரசின் கொள்கை முடிவில் தலையீட நீதிமன்றத்திற்கு உரிமையில்லை எனவும், நீதிமன்றத்திற்கும் ஒரு எல்லை உண்டு.ஆளுநர் உரை என்பது அமைச்சரவையில் தயாரிக்கப்பட்டது எனவும், தமிழகம் மருத்துவ துறையில் சிறப்பாக செயல்படுகிறது என ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. இதனை தனது ஆய்வுகளில் ஆளுநர் உறுதிபடுத்தினாரா என கேள்வி எழுப்பினார்”.இவ்வாறு அவர் கூறினார்.