January 10, 2018 தண்டோரா குழு
பணிக்கு திரும்புவது குறித்து முடிவெடுக்க தொழிற்சங்கங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 1 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளது.
2.57 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 7-ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வு விசாரித்து வருகிறது.
நிலுவைத் தொகையினை தவணை முறையில் வழங்கி வருகிறோம் என்று தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக ரூ.750 கோடி வழங்க அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மீதி தொகை வங்கியில் கடன் வாங்கி நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் ஓய்வூதிய ஊழியர்களுக்கு நவம்பர் 30, 2017 வரை பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது,பேச்சுவார்த்தைக்கு அரசு தயாரானால் ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று போக்குவரத்து ஊழியர்கள் எதிரான வழக்கில் தொழிற்சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளனர்.
இதையடுத்து, பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது.போக்குவரத்து ஊழியர்கள் இன்றே பணிக்கு திரும்ப வேண்டும் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.
மேலும்,பணிக்கு திரும்புவது குறித்து முடிவெடுக்க தொழிற்சங்கங்களுக்கு 1 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு 6 மணிக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் குறித்து இன்றே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.