July 11, 2016 தண்டோரா குழு
தமிழகத்தில் தற்போது அதிக பரபரப்பாக பேசப்படும் விசயமே டாஸ்மாக் தான். நேரம் குறைப்பு, விற்பனை சரிவு உள்ளிட்ட நல்ல விஷயங்கள் வந்துகொண்டு இருக்கும் அதே நேரத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை, அதிக விலைக்கு விற்பனை போன்ற விரும்பத்தகாத செய்திகளும் அவ்வப்போது வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பேருந்து நிலைய கழிவறைகள், மற்றும் ரயில்நிலைய கழிவறைகளை குடிமகன்கள் பாராக மாற்றி வரும் செய்தி வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாகப் பெருநகரங்களில் உள்ள வெளியூர் பேருந்து நிலையங்களில் உள்ள கழிவறைகளை குடிமக்கள் பாராக மாற்றிவருவது வாடிக்கையாக உள்ளது.
இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் வீட்டிலோ அல்லது அலுவலகத்தில் இருந்து வரும்போதோ நேரக்குறைவு காரணமாக டாஸ்மாக் பாரில் அமர்ந்து குடிப்பதில்லை. மாறாக மதுபானங்களை வாங்கி வந்து பேருந்து புறப்படும் நேரத்திற்கு முன்பு அங்கு உள்ள கழிவறைகளில் சென்று குடிக்கின்றனர். இதனால் மீண்டும் அந்தக் கழிவறையை பயன்படுத்தமுடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி குடித்துவிட்டு காலி பாட்டில்களை சுவரின் மீதோ அல்லது கழிவறையின் உள்ளேயே வைத்துவிட்டு வருவதால் அவை கழிவறையின் உள்ளே சென்று அடைத்துக்கொள்கிறது அல்லது மேலிருந்து கீழே விழுந்து உடைந்து அந்தக் கழிவறையை சுத்தம் செய்பவர்களுக்கு அதிக சிரமத்தைக் கொடுக்கிறது. இதனாலேயே அது போன்ற கழிவறையை நீண்ட நாட்கள் சுத்தம் செய்யாமல் உள்ளனர்.
இது குறித்து கூறிய துப்புரவு தொழிலாளி ஒருவர், தான் கழிவறையை சுத்தம் செய்த பொது மேலிருந்து ஒரு மதுபான பாட்டில் தன்மீது விழுந்து அதில் முகத்தில் காயம்பட்டது எனத் தெரிவித்தார். அதிலிருந்து அவர் கழிவறை சுத்தம் செய்யும் பணிக்கே செல்வதில்லை எனவும் தெரிவித்தார்.
பல்வேறு இடங்களில் கழிவறையை பயன்படுத்துவது போல் இருப்பதே மிகப்பெரிய விசயமாக உள்ள நிலையில் குடிமகன்கள் இது போல செய்வதால் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளும் பயன்படுத்த முடியாத நிலையை எட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.
இது மட்டுமின்றி அந்தக் குடிமகன்கள் கழிவறையில் வரும் நீரையே மதுபானம் கலக்க உபயோகப்படுத்துவதால் அவர்களது உடல்நலமும் கெடும் எனக் கழிவறையை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.