January 13, 2018
தண்டோரா குழு
ஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா மட்டுமின்றி உலகின் முன்னணி நட்சத்திர வீரர்களும் பங்கு பெறும் இந்த தொடரானது, இதுவரை 10 சீசன் போட்டித் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், 11-வது சீசன் ஐ.பி.எல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.
இத்தொடரில், பங்கேற்கும் அணிகளில் விளையாட இருக்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.
இதையடுத்து ஐ.பி.எல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்பதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயிரத்து 122 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதில் பழைய அணியில் நீடிக்காத கவுதம் காம்பீர், யுவராஜ் சிங், அஸ்வின், ஹர்பஜன் சிங், ராகுல், ரஹானே, குல்தீப் யாதவ் ஆகியோர் உள்பட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள 281 பேரும் 838 பிரபலமல்லாத வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.
மேலும். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதல் முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.