January 18, 2018 தண்டோரா குழு
கனடா நாட்டில் சரியாக 3 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க பேஸ்புக் புகைபடம் போலீசாருக்கு உதவியுள்ளது.
கனடா நாட்டில் பிரிட்னி கார்கோல் என்ற 18 வயது பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரிட்னி கார்கோல் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்ட போது மிகவும் அதிக போதையில் இருந்துள்ளார். அவரின் கழுத்தை நெரிப்பதற்காக வளையம் ஒன்று பொருத்தப்பட்ட கயிறு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், இந்த கொலை வழக்கை பதிவு செய்து விசாரித்த வந்த போலீஸாருக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்கமால் திணறி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை கைவிடும் முடிவு வரை போலீஸ் சென்றுள்ளது.
இந்நிலையில், போலீஸார் பிரிட்னி கார்கோலின் தோழி ‘செயன் ரோஸ் அண்டோனி’ என்ற பெண்ணின் பேஸ்புக் பக்கத்தை தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, அந்த பெண்ணும், கொலை செய்யப்பட பிரிட்னியும் இருக்கும் புகைப்படம் இருந்துள்ளது.அந்த புகைப்படம் பதிவு செய்யப்பட நாள் அந்த பெண் கொலை செய்யப்பட நாளாகும்.
இதுமட்டுமின்றி அந்த புகைப்படத்தில் பிரிட்னி வயிற்றில் பெல்ட் ஒன்று கட்டி இருக்கிறார். அதில் இருக்கும் வளையமும் கொலைக்கு பயன்படுத்திய கயிற்றின் வளையமும் ஒன்றாக இருந்துள்ளது. இதை வைத்து இந்த கொலையை செயன் ரோஸ் அண்டோனி தான் செய்தது என போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, போலீசார் ‘செயன் ரோஸ் அண்டோனி அழைத்து விசாரித்துள்ளனர். ஆரம்பத்தில் இந்த கொலையை ஒப்புக்கொள்ள அவர் மறுத்துள்ளார். பின்னர், போதையில் சண்டை காரணமாக இப்படி செய்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.