July 13, 2016 வெங்கி சதீஷ்
கடந்த சில தினங்களாகத் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கோவை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள முக்கிய அருவிகளில் வெள்ளம் வருவதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்துள்ளது. கடந்த பத்து நாட்களாகக் கேரளா உள்ளிட்ட வனப்பகுதிகளில் பலத்த மலை பெய்துவருகிறது.
இதையடுத்து கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள நீர்வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் அருகில் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடந்த மூன்று நாட்களாக மன்கி பால்ஸ் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கவும் அருகில் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவைக் குற்றாலம், மூணாறு நீர்வீழ்ச்சி ஆகியவற்றிலும் நீர் அதிகளவு வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். எனவே கோவையை மையமாக வைத்து சுற்றுலா செல்பவர்கள் தற்போது தங்களது திட்டங்களில் இருந்து நீர் வீழ்ச்சிகளைத் தவிர்த்து வருகின்றனர். இதற்குப் பதிலாக வனப்பகுதியில் உள்ள அமைதியான குடில்கள், தனி காட்டேஜ்கள் ஆகியவற்றை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
அதன்மூலம் வன விலங்குகளை அருகில் பார்த்து புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு அமையும் எனவும், அமைதியான சூழல் என்பதால் மன அமைதி கிடைக்கும் எனவும் நினைக்கிறார்கள். இது குறித்து சுற்றுலா அமைப்பாளர் அகமது கவுஸ் கூறும்போது, கோவையைப் பொறுத்தவரை சுற்றுலா பேக்கேஜ் என்பது அருகில் உள்ள நீர் வீழ்ச்சிகளையும் சேர்த்துத்தான் அமையும். ஆனால் தற்போது கடந்த சில நாட்களாகவே வாடிக்கையாளர்கள் நீர்வீழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
அவற்றிற்குப் பதிலாக வனப்பகுதிகளையும் வனவிலங்கு சரணாலயங்களையும் விரும்பிக் கேட்கின்றனர். எனவே ஏற்கனவே பதிவு செய்த பல பேக்கேஜ்களையும் மாற்றியமைத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.