July 14, 2016 தண்டோரா குழு
இந்தியாவில் பாதிப் பெண்கள் 18 வயது அடையுமுன்னரே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் ஜனத்தொகை நிதி மையம்(UNFPA) தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 47 விழுக்காடுகள் குழந்தைகள் திருமண பந்தத்தில் ஈடுபடுத்தப் படுகின்றன என்றும் கூறியுள்ளது.
பால்ய விவாகம் குழந்தைகளின் உரிமையைப் பறிப்பதாகும். இதன் மூலம் அவர்களின் உடல், உள்ளம். உணர்ச்சிகளின் பரிணாமங்கள், மற்றும் கல்வி வாய்ப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும். மேலும் வறுமை, கல்வியறிவின்மை, ஊட்டச் சத்தின்மை, பிரசவத்தின் போது குழந்தைகள் இறக்கும் வாய்ப்பு, போன்ற பல விதமான விளவுகளையும் வலுப்படுத்தும், என்றும் இவ்வமைப்பு கூறியுள்ளது.
பீகார், உத்திரப் பிரதேஷ், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இவ்விவாகங்கள் சட்டத்தைப் பொருட்படுத்தாமல், சமூக அங்கீகாரத்தோடு பெருமளவில் நடைபெறுகின்றன.
பலவிதமான மேம்பாட்டுத் திட்டங்கள் பெண்களுக்கென்று அறிவிக்கப்பட்ட போதிலும், தங்கள் இலக்கை அடைய அவர்கள் அனுமதிக்கப் படுவதில்லை.
21 விழுக்காடுகள் இந்தியாவில் இளம் பருவத்தினர். அதில் 48% பெண்கள் அதாவது கிட்டத்தட்ட 115 மில்லியன் 15 முதல் 19 வயதிற்குள் உள்ளவர்களில் 14% படிப்பறிவில்லாதவர்கள். 73% பெண்கள் பத்து வருடப் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காதவர்கள்.
பால்ய விவாகத்தினால் ஜனத்தொகை பன்மடங்கு உயரும் வாய்ப்புகள் அதிகம். இது இளம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று UNFPA வின் நிர்வாக இயக்குனர் பாபாடுண்டெ ஒசொடிமெஹின் கூறினார்.
வறுமையால் பாதிக்கப்பட்ட, பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத, சுயநலத்திற்காகச் சுரண்டப்பட்ட, பாரம்பரிய பழக்கத்திற்காக நிர்ப்பந்திக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, இளம் பெண்களை சமூகமும், தலைவர்களும் ஒருங்கிணைந்து மேம்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.
குழந்தை விவாகத்தின் காரணமாக குழந்தையே குழந்தை பெற்றெடுக்க நேருவதால் பலவிதமான சங்கடங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய இளம் பெண்களுக்கு அவர்களின் உடலைப் பற்றியும், வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைப் பற்றியும் போதிப்பதோடு அவர்களது உரிமையை நிலைநாட்டுவதும் இன்றியமையாதது என்றும் தெரிவித்துள்ளார்.