July 15, 2016
தண்டோரா குழு
தங்க மனிதன் என்று அழைக்கப்பட்ட தத்தாத்ரே புஜே இன்று கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தங்கத்தினால் ஆனா சட்டையும், கனமான தங்கசங்கிலியும், முரட்டுத்தனமான தங்க காப்பும் அணிந்த புகைப்படத்துடன் சமூக வலைத்தளத்தை கலக்கியவர், மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த தத்தாத்ரே புஜே(48).
இவர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வந்த இவரது தங்க சட்டையால் இவர் தங்க மனிதன் என்று அழைக்கப்பட்டுவந்தார்.
இந்த நிலையில், தனது மகனுடன் காரில் பிறந்தநாள் விழாவிற்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த தத்தாத்ரேவை மறித்த மர்மநபர்கள் அவரைக் கல்லால் அடித்து கொலை செய்தனர். பணப்பிரச்சனை காரணமாக புஜே கொல்லப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவரது உறவினர் உட்பட 4 நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
3.5 கிலோ எடையுடன், 22 காரட் தங்கத்தினால், 15 கைவினைக் கலைஞர்களின் உழைப்பில் முற்றிலும் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட ரூபாய் 1.27 கோடி மதிப்பில் செய்யப்பட்ட இவரின் சட்டையே இவரை பிரபலமடையச் செய்தது. மேலும், உலகின் மிகவும் விலை மதிப்பான சட்டை என்று மதிப்பிடப்பட்டது இவரது சட்டைதான் என்பது குறிப்பிடத்தக்கது.