July 16, 2016 தண்டோரா குழு
மக்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை மிகவும் இன்றியமையாதது. ஆனால் அவற்றுக்கும் மேலே மகிழ்ச்சி என்று ஒன்று உள்ளது. அங்ஙனம் மக்களை அவரவர் தேவைக்கேற்ப மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்ளும் பொருட்டு மத்தியப் பிரதேச அரசு 'ஆனந்த் விபாஹ்' என்னும் பகுதியைத் துவங்கியுள்ளது.
மத்தியப் பிரதேச முதல் மந்திரி ஷிவ்ரஜ் சிங்க் சௌஹன் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் மாநிலத்தின் செழிப்பு பொருளாதார முன்னேற்றத்தில் மட்டுமல்ல மக்களின் ஆனந்தத்திலும் அடங்கியது என்றார்.
இந்த ஆனந்த விபாஹ் பகுதியின் நோக்கம் உணவு, உடை, இடம் போன்றவையோடு வாழ்க்கையை நேரிட்டு எதிர்கொள்ளல், நெருக்கடி நிலையில் சமூகத்தின் ஆதரவு கிட்டச்செய்வது, மகிழ்ச்சியாக வாழ வகை செய்தல் முதலியவை ஆகும். இவ்விலாக்கா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்.
3.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இத்துறை மக்களின் மகிழ்ச்சிக்காகத் தேவையான ஆராய்ச்சிகளையும், பரிசோதனைகளையும் செய்ய ஆரம்பித்துள்ளது. இத்துறை நாளடைவில் பிற துறைகளோடு ஒருங்கிணைந்து மக்களின் ஆனந்தத்திற்கு உறுதுணையாக நிற்கும் கொள்கைகளை உருவாக்க முற்படும்.
இந்த இலாகாவின் தலைவரிடம் மிகுந்த பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும், அதற்கேற்ப அவரது ஊதியமும் ஒரு மாதத்திற்கு 1.50 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூடான் மாநிலத்தில் செழுமையின் அளவுகோல் மக்களின் மகிழ்ச்சியை வைத்தே கணக்கிடப்படுகிறது. இதை முதலில் அமுல் படுத்தியவர் பூடான் அரசர் ஜிக்மெ சிங்க்யெ வங்க்சுக் ஆவர். இதை மனதில் வைத்தே மத்திய பிரதேச மாநிலமும் மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்த
'ஆனந்த விபாஹ்' துறையை அமுல் படுத்தியுள்ளது.