July 18, 2016 தண்டோராக் குழு
சட்டமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் நடைபெறும் இவ்வேளையில் ,தீவிரவாதத் தாக்குதலிருந்து காப்பாற்ற நாய்ப் படையை உபயோகிக்க உள் துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.
பாராளுமன்ற வளாகம் 2001ம் ஆண்டு தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.அதே போன்ற சம்பவம் நடந்தால் பாதுகாப்பது எப்படி என்ற கேள்விக்குப் பதிலாக இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது..
பலவிதமான அடுக்குப் பாதுகாப்புகளைக் கொண்டது இந்த வளாகம்.அனைவரையும் எல்லாவித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபின்னரே உள்ளே அனுமதிப்பர்.
எனினும் சாதாரணமாகக் காணப்படும் பூத்தொட்டிகளுக்குள்ளோ,அல்லது மேஜையின் கீழோ வெடிபொருட்கள் மர்ம நபர்களால் வைக்கப் பட்டிருந்தால் கண்டறிவது கடினம்.
அதைக் கண்டறிய மோப்ப நாய்கள் அவசியம்.இதன் காரணமாகவே பாராளுமன்ற பாதுகாப்பு சேவை மையம் இந்திய திபெத் எல்லையோரக் காவல் படையினரின் கிராக் K9 எனப்படும் நாய்ப் படையின் உதவியை நாடியுள்ளது.
இந்த நாய்கள் எவரேனும் வெடிபொருட்களைத் தொட்டிருந்தாலும் கூட அதைக் கண்டுபிடிக்க வல்லதாகும்.இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் கோல்டன் நோஸ் எனப் பெயரிட்டுள்ளனர்.
தீவிர வாதிகளும் அவர்களை வெளியேயிருந்து கையாளும் நபர்களும் மின்னணு மூலம் உரையாடுவதையும் பகுத்தறிய இவை பயன்படும்.உலகிலேயே சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்ட மோப்ப நாய்கள் ITBP யைச் சேர்ந்தவைகளே.
அதன் காரணமாகவே அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வரும்போது பாதுகாப்பிற்காக இப்படையின் உதவியை அமெரிக்கக் கப்பல் படை நாடுவது வழக்கம்.
மழைக் காலக் கூட்டத்தொடர் முடியும் வரை இந்த ஆபரேஷன் கோல்டன் நோஸ் ITBP யின் DIG ஆர்.சி. பைஜ்வன் தலைமையில் நடைபெறவுள்ளது.