July 19, 2016 தண்டோரா குழு
தற்போது பெண்கள் ஆணுக்குச் சரி சமமாக அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். பெண்களைத் தெய்வங்களாக வணங்கும் நாடுகளில் அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாதது கவலைக்குரிய விஷயமாகும். மேலும் இந்த நிலையைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பெண்கள் சிறு குழந்தையாக இருந்தாலும் சரி வயது முதிர்ந்த பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் பாலியல் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலை என்று மாறும் என்ற கேள்வி மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து உள்ளது.
ஒரு பெண் தைரியமாக இரவில் நடந்தது செல்லும் போது தான் நம் இந்திய தேசம் உண்மையில் சுதந்திரம் பெற்றதற்கு அடையாளம் என்று அண்ணல் காந்தியடிகள் கூறினார். ஆனால் அவருடைய இந்தக் கூற்று எப்பொழுது உண்மையாகும் என்பது ஒரு பெரும் கேள்விக் குறியாக இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
மத்திய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பாலியல் தொல்லைக்கு ஆட்பட்டால் 90 நாள்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அவர்கள் கொடுக்கும் புகார் மனு தொடர்பான விசாரணை நடவடிக்கைகளைப் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மேற்கொள்வதற்காக இச்சலுகை வழங்கப்படவுள்ளது.
இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை பிறப்பித்துள்ள ஆணையில், பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண் ஊழியர்களுக்கு விசாரணைக் காலத்தின் போது அதிகபட்சமாக சுமார் 90 நாள்கள் வரை விடுப்பு வழங்கப்படும். புதிய விதிமுறையின்படி வழங்கப்படும் இந்த விடுப்பு நாள்களுக்கு ஈடாக ஊழியர்களுக்கான விடுப்பு நாள் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பணியாளர் நலத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், பாதிக்கப்படும் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்குவதன் மூலம், குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருடன் சேர்ந்து பணிபுரிய வேண்டிய நெருக்கடி ஏற்படாது என்றார்.
மேலும், பாலியல் தொல்லை உடல் ரீதியாக நெருங்குவது, பாலியல் தேவைகளுக்கு இணங்கும்படி கோரிக்கை வைப்பது, வாய்மொழி வாயிலாகவோ அல்லது சைகை ரீதியாகவோ பாலியல் ஆசைகளை வெளிப்படுத்துவது, ஆபாசப் படங்களை காண்பிப்பது போன்ற நடவடிக்கைகளை பாலியல் தொல்லைகளாக மத்திய அரசு வரையறை செய்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களிடம் குற்றம்சாட்டப்படும் நபர் பணி ரீதியாகப் பாகுபாடு காட்டுவது, வேலை நிலை குறித்து மிரட்டல் விடுப்பது, வேலைகளில் குறுக்கிடுவது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக விசாரணைக் காலத்தின்போது விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.