February 8, 2018 தண்டோரா குழு
கோவை பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் ஐந்து பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கான இரண்டு நாள் நினைவூட்டல் பயிற்சி நேற்று தாமஸ் கிளப் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்துள்ளது. இதனை அறியாமல் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மருத்துவ உதவியாளர்கள் அருணா,சசிகலா,நித்யா,ராணி,திருமாத்தாள்,கவிதா ஆகியோருக்கு வாந்தி எடுத்தவர்கள் அங்கேயே மயக்கம் அடைந்துள்ளனர்.இந்த உணவை சாப்பிட்ட ஐவரில் ஒரு பெண் கர்ப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு மயக்கமடைந்த அனைவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் முத்துராஜா பேசுகையில்,
வருடத்திற்கு இருமுறை 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த பயிற்சி நேற்று தொடங்கி இன்றுடன் முடிகிறது.அரசு புத்தாக்க பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் 150 ரூபாய் என உணவுக்காக கொடுத்தாலும்,இங்கு தரக்குறைவான உணவு தான் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டினார். உணவு விஷயத்தில் தொடர்ந்து நிர்வாகம் சீர்கேட்டோடு நடந்து வருவதாக குற்றம் சாட்டியவர்,மதிய உணவில் வழங்கப்பட்ட சாப்பாட்டில் பல்லி கிடந்ததால் கர்ப்பிணிப் பெண் உள்பட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
மேலும்,நிர்வாகத்திடம் இது குறித்து தெரியப்படுத்தி உள்ளதாகவும், உரிய நடவடிக்கை
மேற்கொள்ளபடும் என நிர்வாக தரப்பில் உறுதி அளிக்கபட்டுள்ளதாகவும், இதுபோல் முன்பு ஒரு முறை நடந்து உள்ளது என்றவர் நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றம் சாட்டினார்.