February 15, 2018
tamilsamayam.com
கிராண்ட் மாஸ்டர் ஹரி கிருஷ்ணா, வெளிநாட்டு செஸ் வீராங்கனையை மணமுடிக்க உள்ளார்.
இந்தியாவின் மிகப் பிரபல செஸ் வீரராக பெண்டலா ஹரி கிருஷ்ணா திகழ்கிறார். இவர் வரும் மார்ச் 3ஆம் தேதி, செர்பிய செஸ் வீராங்கனை நட்ஜாவை ஐதராபாத்தில் மணமுடிக்கிறார்.
இருவரும் ஜூனியர் லெவல் போட்டிகளில் விளையாடும் போதே அறிமுகமானவர்கள். முதலில் நண்பர்களாக இருந்து, அதுவே காதலாகி மணமுடிக்கும் வரை அழைத்துச் சென்றுள்ளது.
இதையடுத்து இருவீட்டார் சம்மதத்தையும் பெற்றுள்ளனர். இதனை ஹரி கிருஷ்ணாவின் தந்தை நாகேஸ்வரராவ் உறுதி செய்துள்ளார். இவர்களின் திருமண அழைப்பு முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த செஸ் வீரர் ஹரி கிருஷ்ணா(31). விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து, 2001 செப்டம்பர் 21ல் மிக இளவயது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். தற்போது அப்பட்டத்தை பரிமர்ஜன் நேகி தன் வசம் வைத்துள்ளார்.
ஹரி கிருஷ்ணா 2001 காமன்வெல்த் சாம்பியன், 2004 உலக சாம்பியன், 2011ல் ஆசிய சாம்பியன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
கடந்த 2000ல் இருந்து 2012 வரை ஏழு செஸ் ஒலிம்பியாட்ஸில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார். 2010ல் உலக குழு செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆசிய குழு சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கம் ஒருமுறையும், வெள்ளி ஒருமுறையும், வெண்கலம் ஒருமுறையும் வென்றுள்ளார்.