February 15, 2018 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கான நீரா பானம் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான உரிமம் விரைவில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் சுமார் 87 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தென்னை விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில், நீரா பானம் இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் 3 நிறுவனங்கள் தென்னை நீரா பானம் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அனுமதி கோரி, விண்ணப்பங்களை வழங்கினர். இந்நிறுவனங்கள் தயாரித்த நீரா பானத்தை சுவைத்து பார்த்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் நீரா உற்பத்தி மற்றும் விற்பனைக்கான உரிமம் வழங்கப்படுமென தெரிவித்தார்
இது குறித்து ஆனைமலை தென்னை விவசாயிகள் நிறுவனத்தின் தலைவர் தனபால் கூறுகையில்,
“நீரா பான உற்பத்தி தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயை அளிக்கும் எனவும், இந்தாண்டில் தினசரி ஆயிரம் லிட்டர் நீரா தயாரிக்கவும், அடுத்து வரும் ஆண்டுகளில் உற்பத்தி அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்,நீரா பானத்தின் விலை ஒரு லிட்டருக்கு சுமார் நூறு ரூபாய் என நிர்ணயிக்கப்படலாம்” எனவும் அவர் தெரிவித்தார்.