July 21, 2016 தண்டோரா குழு
அன்ன தானம், கல்வி தானம் இவ்விரண்டும் பிறப்பு அறுக்க வல்லது என்று சொல்லி விட்டுச் சென்றனர் நம் முன்னோர் அன்று.
கல்வி கற்பிப்போர்களே எங்களுக்குத் தானம் வேண்டாம், தலையைக் கொய்யாதீர்கள் எனக் கதறும் நிலைக்குப் பெற்றோர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் இன்று என்றால் அது மிகையாகாது.
கல்வி ஒரு வியாபாரமாகிவிட்டது. பள்ளிகளாகட்டும், கல்லூரிகளாகட்டும், பணம் ஒன்றே பேசும் கருவி. நுனிநாக்கு ஆங்கிலமும், அயல் நாட்டுச் சீருடையும் நம்மை அரசுப்பள்ளியை அலட்சியம் செய்ய வைத்தது. விளைவு குழந்தைகளின் கல்வி பெற்றோர்களின் தோளில் பெருஞ்சுமையாக ஏறிவிட்டது.
புத்தகம் முதல் சீருடைவரை பள்ளியிலேயே வாங்க வேண்டுமென்ற நியதி மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வை நீக்கும் என்பது உறுதி, என்றாலும் ஏழைப் பெற்றோர்கள், பணம் படைத்தோரை எட்ட படும்அவஸ்தை சொல்லி மாளாது.
இதற்கு முத்தாய்ப்பாக தற்போது நவீன தொழில் நுட்பங்களும், தொழில் நுட்பக்கருவிகளும் இன்றியமையாதது ஆகிவிட்டது. கணினி வளர்ச்சி அனைவரையும் ஆட்டிப் படைப்பதோடு அடிமையும் ஆக்கிவிட்டது.
கடலில் எதிர் நீச்சல் போட பிஞ்சு உள்ளங்கள் பிழியப்படுகின்றன. அதற்கு உதாரணம் கோவையில் சுகுணா பிப் என்ற பள்ளியில் இரண்டாவது வகுப்பிலிருந்து அனைத்துக் குழந்தைகளும் கட்டாயமாக ஆப்பிள் ஐபேட் ஐ
பள்ளியிலிருந்து வாங்கிக் கற்க வேண்டும் என்பதே. குழந்தைகளைச் சிறு வயதிலிருந்தே நவீன தொழில்நுட்பங்களைக் கற்கச் செய்தால் பிற்காலத்தில் அவர்களால் எதையும் எதிர்கொள்ள முடியும் என்பது பள்ளியின் வாதம்.
ஐபேட் உபயோகத்தால் ஏற்படும் நன்மைகளைப்பற்றி இரு வருடங்கள் ஆய்வு செய்த பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டதென்றும், இதன் மூலம் புத்தகச்சுமை குறையுமென்றும், நாள் முழுதும் செய்யும் வேலை ஒரு சில மணி நேரங்களில் முடியும் என்றும் இப்பள்ளியின் தலைவர் Dr.விஷ் தெரிவித்தார்.
விலையுயர்ந்த ஆப்பிள் ஐபேட் வாங்கக் கட்டாயப்படுத்துவதால் ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர் நிதிச் சுமைதாளாது பள்ளியை மாற்றியுள்ளனர்.
ஆப்பிள் ஐபேட் பிற ஐ பேட்களை விட உயர்ந்தது என்ற காரணத்தினாலேயே மாணவர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆப்பிள் ஐ பேட் சமீபத்திய, மற்றும் சிறந்த நுணுக்கங்களைக் கொண்டது. கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இவை விற்பனை செய்யப்படுகின்றன. சுகுணா பிப் பள்ளிக்கு தாங்கள் தள்ளுபடி விலையில் 550 சாதனங்கள் விற்றதாகவும், அவற்றில் 230 திருப்பியனுப்பட்டு விட்டதாகவும், ஐ பிளானெட் மேலாளர் அப்துல் ரெஹ்மன் தெரிவித்தார்.
குழந்தைகள் பள்ளியை மாற்றியதே இதற்குக் காரணம் என்றும் கூறினார். வியாபார நோக்கில் இவை பொருத்தமானவையாக இருந்தாலும், ஐபேட் போன்ற கருவிகளைச் சிறு குழந்தைகள் உபயோகிக்கும் போது அதன் தாக்கம் மிகுந்த தீங்கை இழைக்கக் கூடியது, குழந்தைகளின் கண் பார்வை நாளடைவில் பாதிக்கப்படும், அது மட்டுமின்றி பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே சிறு குழந்தைகள் உபயோகிக்க அனுமதிக்க வேண்டும் என்று மசானிக் மெடிகல் சென்டர் தலைமை மருத்துவர் Dr.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
கோவை மெடிகல் சென்டர் மருத்துவமனை மனநல மருத்துவர் Dr.D.சீனிவாசன் கூறுகையில், பாடச் சம்பந்தமான விஷயங்களுக்கு மட்டும் உபயோகிப்பதென்றால் கெடுதலில்லை. ஆனால் வகுப்பறையிலும், வீட்டிலும் உயிருள்ள மனிதர்களிடையே அளவளாவுவதை பாதிக்கும் என்றால் அது தீமையை விளைவிக்கும் என்றார்.
இத்தகைய கருவிகளை ஏழு அல்லது எட்டு வயதிற்கு உட்பட்டோருக்கு உபயோகிக்க அனுமதிக்க யோசிக்கவேண்டும் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்டீவ் ஜொப்ஸ்ன் கருத்து.
அவரது குழந்தைகள் ஆப்பிள் ஐபேட் ஐ மிகவும் நேசிப்பார்களா என்று ஜொப்சிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, தன் குழந்தைகள் அவற்றை உபயோகித்ததே இல்லை என்றும், குழந்தைகளின் வரைமுறைகளை வகுப்பது அவசியம் என்றும் பதிலளித்தாக பத்திரிக்கைகள் தெளிவு படுத்தியுள்ளன.
குழந்தைகள் முதலே கணினி மற்றும் ஐ பேட் போன்ற நவீன ரக உபகரணங்களை உபயோகிக்கத் துவங்கும் குழந்தைகள் சுயமாக சிந்திக்கும் திறனை இழக்கும் அபாயம் உள்ளது எனவும், குழந்தைகளுக்கு அவசியம் தெரியவேண்டிய அடிப்படைகள் எதுவுமே தெரியாமல் அனைத்தும் கணினியில் வருவதால் சுய சிந்தனையை இழக்கும் அபாயம் இருக்கிறது எனவும் ஆங்கில நாளிதழ்
ஒன்று நடத்திய ஆய்வில் முடிவு அறிவிக்கப்பட்டது.
இதனால் குறிப்பிட்ட வயது வரை பாடத்திட்டங்களை புத்தகம் மற்றும் நோட்டுக்களைப் பயன்படுத்தி சொல்லித்தருவது தான் சிறந்தது என அந்த ஆய்வுக்கட்டுரை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.