July 21, 2016 தண்டோரா குழு
அமெரிக்காவில் சியாடில் நகரத்தில் உள்ள கிராவிடி பேமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் பிரைஸ். தனது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்த பட்ச வருட வருமானத்தை 70,000 டாலர் என உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.
வருட வருமானம் 70,000 டாலரைத் தாண்டுமாயின் அது மக்கள் மகிழ்ச்சியாகப் பாங்குடன் வாழப் போதுமானதாக இருக்கும் என்ற ஆய்வுக் கருத்தை அனுசரித்தே இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.
இந்தப் பற்றாக் குறையை தனது வருமானத்தைக் குறைத்து ஈடுகட்டப்போவதாக அறிவித்துள்ளார். வருடத்திற்கு 1.1 மில்லியன் டாலராக உள்ள தனது வருமானத்தைக் குறைந்த பட்ச ஊதியமான 70,000 டாலருக்குக் குறைத்துக் கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.
இந்த ஊதிய உயர்வு சில ஊழியர்களுக்கு நூறு சதவீத உயர்வை அளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சொந்த வருமானத்தைத் தியாகம் செய்து சக ஊழியர்களை மகிழ்விக்க முற்பட்ட தங்கள் நிறுவனத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஊழியர்கள் பரிசளிக்க முற்பட்டுள்ளனர்.
24 வயதுப் பெண் ஊழியரின் ஆலோசனைப்படி 120 ஊழியர்களும் தங்களது வருமானத்தில் ஒரு பங்கைச் சேமித்து ஆறாவது மாத இறுதியில் தங்களது நிறுவன முதல்வருக்குப் புத்தம் புதிய டெல்சா மாடெல் S காரைப் பரிசாக அளித்துள்ளனர்.
சுமார் 70,000 டாலர் மதிப்புள்ள இந்தக் காரை வாங்க வேண்டுமென்பது இவரது நீண்ட நாளையக் கனவு என்பது குறிப்பிடத்தக்கது. ஊழியர்களின் அன்புப் பரிசைக் கண்டு தான் திடுக்கிட்டதாகவும், மகிழ்ச்சியில் திளைத்ததாகவும் டான் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
தனது சக ஊழியர்களுக்காகத் தியாகம் செய்யும் தலைவரும், தியாகத்தைப் பகுத்தறிந்து நன்றி செலுத்தும் தொண்டர்களும் உள்ள நிறுவனம் உச்ச நிலை எட்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இவரது செயலுக்குப் பின்னால் வேறொரு காரணம் உள்ளது என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தனது பங்கை நியாயப்படி அளிக்கவில்லை என்றும், விதிமுறைகள் சரிவரக் கடைப்பிடிக்கப் படவில்லை என்றும், பெருமளவு தொகையைத் தனக்கே டான் ஒதுக்கிக் கொள்வதாகவும், சொந்தச் செலவுகளை நிர்வாகக் கணக்கில் காண்பிப்பதாகவும் இணை இயக்குனரான இவரது சகோதரர் லூகாஸ் பிரைஸ் குற்றஞ்சாட்டி நீதி மன்றத்தை அணுகப்போவதாக எச்சரித்துள்ளதே இவரது மாற்றத்திற்குக் காரணம் எனவும் குறை கூறியுள்ளனர்.