July 21, 2016 தண்டோரா குழு
சிரியாவில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக உளவு பார்த்ததாக சந்தேகித்து 11 வயது சிறுவன் ஒருவனைக் கிளர்ச்சியாளர்கள் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர்.
இந்தப் படுகொலையை அவர்கள் பதிவு செய்து வெளியிட்டும் உள்ளனர். அதைப் பார்த்த மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் அலெப்போ நகருக்கு வடக்கே உள்ள ஹேண்டராத் என்ற இடத்தில் நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் பெயர் அப்துல்லா இஸா ஆகும். அவனை ஒரு வாகனத்தின் பின் பகுதியில் ஏற்றிக் கதற கதறக் கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் அவனுடைய தலையை துண்டித்து உள்ளனர்.
ஈரான் நாட்டின் கூடுதல் பிராந்திய நடவடிக்கை இயக்கமான குத்ஸ் பிரிகேட் அமைப்பை சேர்ந்தவன் இந்தக் கைதி. அவர்களிடம் பெரிய ஆண்கள் இல்லாததால் இவனைப் போன்ற சிறுவர்களை உளவு பார்க்க அனுப்புகின்றனர் என்று அந்த வாகனத்தில் அமர்ந்து இருத்த இருவர் கூறினர்.
ஆனால், இந்த அறிக்கையை ஈரான் நாட்டின் குத்ஸ் பிரிகேட் அமைப்பு மறுத்து உள்ளது. அந்த 12 வயது சிறுவன் அவர்களுடைய அமைப்பைச் சேர்ந்தவன் அல்ல என்றும் அவன் ஒரு பாலஸ்தீனிய அகதி என்று தெரிவித்தனர். மேலும், இந்தச் சிறுவனை படுகொலை செய்தது ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கிளர்ச்சியாளர்கள் நூர்-அல்- டின் அல்-ஜிங்கி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இவற்றுக்கு துருக்கி நாட்டின் ஆதரவு கிடைத்துள்ளது. மேலும், அமெரிக்க போர் ஆயுதமான ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துகின்றனர் என்று சிரிய மனித உரிமை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் நடந்ததற்கு இவைதான் காரணம் என்று உறுதியானால் இந்தக் குழுவோடு அனைத்துத் தொடர்பையும் நிறுத்திக்கொள்ள முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் உலகம் முழுவதையும் அச்சத்தால் நிரப்பியுள்ளது. மேலும், நூர் அல்-டின் அல்- ஜிங்கி அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மனித உரிமை மீறல்கள் என்று சமூக ஊடக தளங்கள் வர்ணிக்கும் இந்தச் சம்பவம் அதனுடைய கொள்கை அல்லது நடைமுறைக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்றும் அங்கே என்ன நடந்தது என்று விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று அறிவித்துள்ளது.