July 21, 2016 தண்டோரா குழு
நம் இந்திய தேசம் பண்பிற்கும், விருந்தோம்பலுக்கும், கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்றது. நம் நாட்டின் “வேற்றுமையில் ஒற்றுமை” பண்பாட்டைப் பார்த்து வெளிநாட்டு மக்கள் அதிசயித்துப் போற்றி உள்ளனர்.
ஆனால் தற்போது நம் நாட்டில் உள்ள நிலை தலைகீழாக உள்ளது. வன்முறை, வெறித்தன்மை, கற்பழிப்பு, லஞ்சம் போன்ற கொடுமையான நிலை உருவாகியுள்ளது.
இன்று மனிதர்களுக்கும் பாதுகாப்பு இல்லை வாயில்லா ஜீவன்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற பரிதாபமான நிலை தான் மிச்சம். இன்று பலர் மனசாட்சியே இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதிற்கு ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் ஒரு உதாரணம்.
கடந்த சில வாரங்களுக்கு முன் குன்றத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர், நாய் ஒன்றை நான்காவது மாடியில் இருந்து கீழே வீசிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விலங்கு நல ஆர்வலர்கள் தலையிட்டதையடுத்து அந்த நாய்க்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மாணவர்களுக்கு எதிராகப் புகார் பதிவு செய்யப்பட்டதோடு, அவர்கள் கல்லூரியில் இருந்து தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் ஓயாத நிலையில், இந்தியாவின் தெற்கு மாநிலங்களில் ஒன்றான ஆந்திர பிரதேஷ் மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் இதைவிடக் கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
அங்கு, ஒரு வீட்டில் உள்ள நாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. அதை வளர்க்க முடியாத ஒருவர் அந்தத் தாய் நாயைச் சுட்டுக்கொன்றுவிட்டு அதன் 3 குட்டிகளைத் தூக்கி வீசியுள்ளார்.
அவற்றை சில சிறுவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கட்டி, எரியும் தீயில் வீசி உள்ளனர். வெப்பம் தாங்காமல் தப்பி ஓட முயன்ற நாய்க்குட்டிகளை ஓட விடாமல் கையில் வைத்துள்ள குச்சியால் மீண்டும் மீண்டும் தீக்குள் தள்ளி உள்ளனர்.
சிறிது நேரத்தில் அந்தப் பிஞ்சு ஜீவன்கள் தீயில் கருகி இறந்து போயின. இந்தக் கொடூரத்தை
செய்த வாலிபர்கள் இதை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.
நெஞ்சைப் பதறவைக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தக் கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய அந்த 5 சிறுவர்களையும் காவல்துறை அதிகாரிகள் கைதி செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இயற்கையையும், மனிதர்களையும் மட்டுமின்றி விலங்குகளையும் கடவுளாக வணங்கிய சமூகத்தில் தற்போது மனிதர்களுக்கே மரியாதை இல்லை எனும்போது, விலங்குகளுக்கு எங்கே மரியாதை இருக்கப்போகிறது. இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் இன்னமும் தொடரக்கூடாது என்பது ஒன்றே விலங்குகள் நல ஆர்வலர்களின் நோக்கமாக உள்ளது.