February 27, 2018
www.tamilsamayam.com
கடந்த ஆண்டில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்களுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 3வது மஹிந்திரா ஸ்கார்பியோ டைம்ஸ் ஆஃப் இந்தியா விளையாட்டு விருதுகள் (டாய்ஸா) நேற்று வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்யும் குழுவின் ஆலோசகராக ஸ்வீடனைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ஸ்டெபன் எட்ஸ்பெர்க் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டிற்கான விருதுகள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, இந்திய பில்லியர்ட்ஸ் வீரர் அங்கஜ் பதானி, இந்திய அணியின் ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் வீராங்கனை சவீதா புனியா, இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து, இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் அங்கூர் மிட்டல் ஆகியோர் உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டி20 போட்டியின் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் கடந்தாண்டு முதலிடமும், ஒருநாள் போட்டியில் 3வது இடமும் பிடித்தவர் பும்ரா. பெண்கள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு செல்ல காரணமாக இருந்த ஹர்மன்ப்ரீத் சிங் 2வது முறையாக டாய்ஸா விருது பெற்றுள்ளார். இவர்களைத் தொடர்ந்து முதல் முறையாக இந்த விருதுகள் பெறும் வீரர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.