July 23, 2016 வெங்கி சதீஷ்
கபாலி படம் இதுவரை உலகத்திலேயே இல்லாத அளவிற்கு மிகுந்த விளம்பரத்துடன் வெளியிடப்பட்டது. இதில் ரஜினியின் நடிப்பு அருமையாக இருந்த போதும், அவரது வழக்கமான ஸ்டைல் இல்லாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
இந்நிலையில் வெளியிடுவதற்கு முன் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தற்போதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் முதலாவதாக மலேசியாவில் கபாலி படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக தியேட்டர் மாடியில் இருந்து குதித்து
வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து மலேசிய காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
இரண்டாவது சென்னையைச் சேர்ந்த ஒரு அதிகாரி தன்னுடைய பதவியை இழந்துள்ளார். அவர் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் உதவியாளர் பிரேம்குமார் தான். இவர் தனது லெட்டர் பேடில் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் கபாலி படத்திற்கு பத்து டிக்கெட் கேட்டு பரிந்துரை செய்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வெளியானதால் இவரது பதவி பறிக்கப்பட்டது. எனவே கபாலி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஒரு உயிர் மற்றும் ஒரு பதவி காலியாக காரணமாக இருந்துள்ளது.
இந்நிலையில் கோவையில் உள்ள இரண்டு திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் இல்லாததால் கபாலி படத்தின் காலைக்காட்சி ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.