July 24, 2016 epdpnews.com
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்தது.
தொடக்க வீரர் கிரேக் பிராத்வைட் 11 ரன்னுடனும், நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய பிஷூ ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மதிய உணவு இடைவேளை வரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வைட் 46 ரன்னுடனும், சாமுவேல்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இதனை அடுத்து, முகமது சமியும், உமேஷ் யாதவும் தங்களது வேகத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றிக் கொண்டே இருந்தனர்.
இதனால் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தது. நீண்ட நேரம் தாக்கு பிடித்து விளையாடிய பிராத்வைட் 74 ரன்கள் எடுத்திருந்த போது உமேஷ் யாதவிடம் வீழ்ந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய டவுரிச் 57 ரன்களும், ஹோல்டர் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து பாலோ ஆன் ஆனது.
முகமது சமி, உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டுக்களை சாய்த்தனர். மிஸ்ரா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து மீண்டும் பேட்டிங் செய்யும்படி இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை கேட்டுக் கொண்டது. 323 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடங்கியது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 13 ஓவர்களில் 21 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.
முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராத்வைட் 2 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சந்திரிகா(9), டேரன் பிராவோ(10) ரன்களில் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் 302 ரன்கள் இந்தியாவை விடப்பின் தங்கியுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது என்பதால், இந்திய அணி வெற்றி பெறுவது கிட்டத் தட்ட உறுதியாகிவிட்டது.