July 25, 2016
தண்டோரா குழு
ஏழை மக்கள் அனுபவிக்கும் பசி, பட்டினியின் துயரமும், வேலை தேடி அலைவதன் வலியும், ஒதுக்கப்படும் போது ஏற்படும் அவமானங்களும் எத்தகையது என்பதை அனுபவ பூர்வமாக உணர வைக்க ஒரு கோடீஸ்வரத் தந்தை தன் மகனை ஒரு மாதம் களத்தில் இறக்கினார்.
குஜராத்தின் பெரிய வைரவியாபாரி சவ்ஜி தொலகியா. 71 நாடுகளில் கிளைகளைக் கொண்ட 6,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹரே கிருஷ்ணா வைர ஏற்றுமதி நிறுவனத்திற்குச் சொந்தக்காரர்.
சமீபத்தில் அவரது நிறுவனத் தொழிலாளர்களுக்கு வெகுமதியாக காரும், அடுக்கு மாடி வீடுகளும் வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார். இவரது மகன் ட்ரவ்ய தொலகிய. தங்கத் தட்டில் உணவருந்தி, தங்கத் தொட்டிலில் தூங்கிய மகன் வாழ்க்கையின் மறுபக்கத்தை அனுபவ பூர்வமாக உணரவேண்டும் என்ற எண்ணத்தில் பரிசயமில்லாத இடத்திற்கு அனுப்ப முடிவு செய்தார்.
21 வயதான ட்ரவ்ய அமெரிக்க MBA பட்டதாரி. தந்தையின் கட்டளைக்கிணங்க மொழி தெரியாத கேரளாவிலுள்ள கொச்சியை ஜூன் 21 ம் தேதி மூன்று ஜோடி ஆடையுடனும், 7,000 ரூபாய் பணத்துடனும் சென்றடைந்தார்.
தன்னுடைய பெயரை எந்தச் சூழ்நிலையிலும் உபயோகிக்கக் கூடாதென்றும், கொடுக்கப்பட்ட பணத்தை நெருக்கடி நிலையில் மட்டுமே உபயோகிக்கவேண்டும் என்பது இவரது தந்தையின் நிபந்தனை. பரீட்சைக் காலம் ஒரு மாதம் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
கைப்பேசியை உபயோகிக்கக்கூடாது என்பதும், அடுத்த வேளை உணவை சுயமாகச் சம்பாதித்த பணத்தில் தான் வாங்க வேண்டும் என்பதும் நிபந்தனையில் அடங்கும். கொச்சியில் 5 நாட்களுக்கு எந்தவித வேலையும் கிடைக்காமலும், தங்குவதற்குச் சரியான இடமும் கிடைக்காமலும் ட்ரவ்ய பரிதவித்துள்ளார்.
60க்கும் மேற்பட்ட இடங்களில் தான் புறக்கணிக்கப்பட்டது தன்னை வெறுப்பின் உச்சக் கட்டத்திற்கே தள்ளியது என்றும், ஏமாற்றத்தின் வலியையும், பணத்தின் அருமையையும் ஒரு சில நாட்களுக்குள்ளேயே உணர வைத்து விட்டது என்றும் தெரிவித்தார்.
தனது கல்வித் தகுதி 12ம் வகுப்பு என்றும் குஜராத்ல் உள்ள ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ட்ரவ்ய. முதலில் செரனெல்லூரில் உள்ள ஒரு ரொட்டிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
அதன்பின் கால்சென்டர் ஒன்றிலும், பிறகு மெக்டொனல்ட் மையத்திலும் பணிபுரிந்தார். மாத வருவாய் 4000 த்திற்குள் உணவுப் பிரச்சனையையும், தங்குமிடப் பிரச்சனையையும் சமாளிப்பதற்குப் போராட வேண்டியிருந்தது என்றார். ஒரு வேளை உணவிற்கு 40 ரூபாயும் ஒரு நாளைய வாடகையாக 250 ரூபாயும் கொடுப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது என்றும்.
பணத்தைப் பற்றி கவலைப் படாமல் இருந்த தனக்கு பணத்தின் மதிப்பை உணரவைத்தது என்றும் தெரிவித்தார். ரொட்டிக் கடையில் சந்தித்த கே.ஸ்ரீஜித் தனது நிறுவனத்தில் ட்ரவ்யவிற்கு வேலை அளிக்க முன் வந்துள்ளார். ஆனால் அவரது நண்பர்கள் மறுத்ததின் விளைவாக ட்ரவ்யாவிற்கு வேலையளிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மறுநாள் ட்ரவ்ய்ன் தந்தையின் நிறுவனத்தில் இருந்து எல்லா விஷயங்களையும் தெரிவித்து, நன்றியையும் தெரிவித்தனர் என்றும் ஸ்ரீஜித் கூறினார்.