March 14, 2018 findmytemple.com
சுவாமி : இராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்.
அம்பாள் : பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி, விசாலாட்சி, சீதை.
மூர்த்தி : இராமர், இலட்சுமணர், ஆஞ்சநேயர், இராமலிங்கம், காசி விஸ்வநாதர், நடராஜர், பெருமாள், சந்தானகணபதி, முருகன்
தலச்சிறப்பு : இராமநாதசுவாமி திருக்கோவில், இந்துமதக் கோவில்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இறைவனே இறைவனை வழிபட்ட பெருமை கொண்ட கோவில் ஆகும். இத்தலம் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இராமேஸ்வரம் இராமாயணகால வரலாற்றையுடைய கோவிலாக இருந்தாலும், இந்த கோவிலின் தற்போதைய வடிவமைப்பு 12-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. இத்திருக்கோவிலின் புராணம் மற்றும் கட்டிட வரலாறு என இரண்டுமே சிறப்பானது.
இராமேஸ்வரம் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது.
இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும் வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத்தில் இல்லை. ஆலயத்தினுள் இராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானக்கள் அமைந்திருக்கின்றன. சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு இரமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கர் சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு இன்றும் காணலாம்.
சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் திரு உருவங்கள் காணலாம். இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார்.
அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் உள்ளார். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது.
ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது. தினமும் காலை 5.00 மணிக்கு ராமநாதசுவாமி சன்னதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது “சேதுபீடம்” ஆகும்.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும். முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1740 – 1770 ஆண்டுகளில் இந்த மூன்றாம் பிரகாரம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளது. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.
சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று இராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன. விபீஷணன், இராமருக்கு உதவி செய்ததன் மூலம் இராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்தப் பாவம் நீங்க, இங்கு இலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தைப் போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த இலிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, “ஜோதிர்லிங்கம்” ஆயிற்று. இந்த இலிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.
இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள், மிகச் சிறப்பாகக் கருதப்படும் நான்கு தலங்கள், வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே ராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவது தலமான ராமநாதம் ஒன்றே சிவதலம் ஆகும். இத்தலத்தில் ராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுவது சிறப்பு.
காசி, இராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும். கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, இராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும். சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை இராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.
அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னிப் பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் “அக்னி தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன. இராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள இருபத்தி இரண்டு கிணறுகளே அதன் தனிச்சிறப்பு ஆகும். இந்த கிணறுகள் அனைத்தும் இராமரால் உருவாக்கப்பட்டவை என்று நம்பப்படுகிறது. இராமர் எய்த அம்புகள் விழுந்த ஒவ்வொரு இடத்திலும் ஒரு கிணறு உருவானது. இந்தக் கிணறுகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. அருகருகே இருந்தபோதும், ஒவ்வொரு கிணற்றின் நீருக்கும் சுவை, நிறம், உப்புத்தன்மை, அடர்த்தி ஆகியவை மாறுபடுகிறது. புண்ணிய தீர்த்தங்களான இந்த இருபத்து இரண்டு கிணறுகளிலும் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டால், நமது பாவங்கள் அனைத்தும் கரைந்தோடி நமக்கு மோட்ச ம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் இராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது.
வழிபட்டோர் : இராமர், சீதை, இலட்சுமணர், ஆஞ்சநேயர்
பாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.
நடைதிறப்பு : காலை 4.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
பூஜைவிவரம் : ஆறுகாலபூஜைகள், பள்ளியறை தீபாராதனை காலை 5.00 மணி, ஸ்படிகலிங்க தீபாராதனை காலை 5.10 மணி, திருவனந்தல் தீபாராதனை காலை 6.00 மணி, விளாபூஜை காலை 7.00 மணி, காலசந்தி காலை 10.00 மணி, உச்சிகாலம் பகல் 12.00 மணி, சாயரட்சை மாலை 6.00 மணி, அர்த்தஜாமம் இரவு 8.30 மணி, பள்ளியறைபூஜை இரவு 8.45 மணி.
அருகிலுள்ளநகரம் : இராமேஸ்வரம்.
கோயில்முகவரி : அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்,இராமேஸ்வரம் – 623 526, இராமநாதபுரம் மாவட்டம்.