July 26, 2016 தண்டோரா குழு
கடல் பரப்பில் இருந்தும் வானில் எழுந்து பறக்கக் கூடிய உலகின் மிகப் பெரிய விமானத்தைச் சீனா உருவாக்கியுள்ளது.
இந்த விமானம் சீனாவின் தெற்கு துறைமுக நகரான ஜுகை நகரில் கடந்த சனிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான ஜின்குவா அறிவித்து உள்ளது.
ஏஜி 600 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தைச் சீன அரசுக்குச் சொந்தமான ஏவிஐசி (சீன விமானத் தொழில் நிறுவனம்) உருவாக்கியுள்ளது. இந்த விமானம் முழு எரிபொருள் பயன்படுத்தி சுமார் 4,500 கிலோமீட்டர் பறக்கும் திறன் கொண்டது என்றும் கடற்பகுதியில் விபத்து நேரிடும்போது மீட்புப் பணிகளுக்கும் நிலப்பகுதியில் காட்டுத் தீயை அணைக்கவும் இந்த விமானத்தைப் பயன்படுத்த முடியும்.
இது மட்டுமின்றி, கடல்வள மேம்பாடு மற்றும் பயன்பாடு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, புதிய வளங்கள் கண்டுபிடிப்பு, போக்குவரத்து என்று பல்வேறு தேவைகளுக்கும் இந்த விமானத்தைப் பயன்படுத்த முடியும் என்று அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
.
மேலும், தென் சீனக் கடல் பகுதியில் உள்ள சில தீவுகளைச் சீனா சொந்தம் கொண்டாடி வருவதால் அந்நாட்டுக்கும் ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் இந்த விமானம் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஏவிஐசி நிறுவனத்துக்கு இதுபோல் சுமார் 17 விமானங்களுக்கான ஆர்டர் இதுவரை வந்துள்ளது என்று கூறப்படுகிறது.
விமானத் தேவைகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களைச் சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில், உள் நாட்டுத் தொழில்நுட்பத்தை சீனா மேம்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.