July 26, 2016 தண்டோரா குழு
உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனி மய மாதா பேராலய திருவிழா இன்று தொடங்கி ஆக.5ம் தேதி வரை நடைபெறுகிறது.
தூத்துக்குடி தூய பனி மய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தத் திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் 434-வது ஆண்டு திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
இன்று காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 8.30மணிக்குக் கொடியேற்றமும், மதியம் 12 மணிக்கு அன்னைக்குப் பொன் மகுடம் சூட்டப்படுகிறது.
6ம் நாள் திருவிழாவான 31ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் புதுநன்மை, கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. ஆகஸ்ட் 4-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று இரவு 7மணிக்கு ஆயர் பெருவிழா மாலை ஆராதாணை நடக்கிறது. அன்பின் இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.
திருவிழாவி்ன முக்கிய நிகழ்வான அன்னையின் பெருவிழா ஆகஸ்ட் 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்னையின் பெருவிழாவான அன்று காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30மணிக்கு 2ம் திருப்பலியும், 7.30 மணிக்கு மதுரை முன்னாள் பேராயர் பீட்டர் பர்ணாண்டோ தலையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. பகல் 12 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடக்கிறது. மாலை 5.30மணியளவில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.
திருவிழாவிற்காகச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் நகரில் உள்ள அனைத்து மண்ணின் மைந்தர்கள், குருக்கள், துறவியர், அருட்சகோதர, சகோதரிகள் கலந்துகொள்கிறார்கள். இந்தத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை லெரின் டிரோஸ் தலைமையில் உதவி பங்குதந்தையர்கள் வினிஸ்டன், ஜெகதீஷ், மற்றும் பணிக்குழுவினர் செய்து வருகின்றன. ஆக.5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று நடைபெறும் பெருவிழாவில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள்.